deepak
deepak

Sunday, October 12, 2014

தீபாவளி என்றால் என்ன?

தீபாவளி என்றால் என்ன?


தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.


சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.

தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.

அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல. 


கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.

நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.

Friday, October 10, 2014

கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது

கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது. 

அதாவது, 

முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்தார். பிருங்கி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும், ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம் வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபமுற்ற பார்வதி தேவி, பிருங்கி முனிவரை முடமாக்கினார். 

பக்தரை அந்த நிலையில் விட்டுவிட விரும்பாத சிவ பெருமான் ஊன்றுகோலை வழங்கினார். அதனைப் பெற்ற பிருங்கி, மீண்டும் சிவனை வணங்கிவிட்டு திரும்பினார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌத முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார்.

ஆசிரமத்துக்கு வந்த அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்குக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாட்களும் கடும் விரதம் இருந்து சிவனைப் பூஜித்தாள். பார்வதி தேவியின் கடும் தவத்தால் மனம் இளகி தரிசனம் தந்தார். 

இறைவனைக் கண்ட பார்வதி தேவி, ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். உடனே வரத்தை அளித்து, சிவனின் உடலில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார். அப்போது, அம்பிக்கை சிவனை நோக்கி “இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.  அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார் பரமேஸ்வரன்.

கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

அவரவர்கள் செளகரிய ப்படி 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட் களோ, 3 நாட்களோ அல்லது ஐப் பசி அமாவாசையான தீபாவளிய ன்று கேதாரகெளரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெரு மானை வழிபடவேண்டும். ஆண்க ளும் இவ்விரதத்தை அனுஷ்டிக் கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத் திற்கு முன்னர் “பாரணம்” பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.
தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஜெபித்து, அர்த்தநாரீஸ்”வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். பூஜைக்காக முதலில் மஞ்சள், பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அறுகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம், நைவேத்தியம் செய்து தீபாராதனையான பிறகு, கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்ய வேண்டும்.
அதாவது அம்மியையுங் குழவியையும் அலங்கரித்து அம்மியின் மேல் குழவியை நிறுத்தி குங்குமம், சந்தனம் முதலிய பரிமள திரவியங்கள் அணிவித்து பருத்தி மாலையிட்டு புஷ்பஞ்சார்த்தி அதனெதிரில் கலசம் நிறுத்தி அதற்கும் பருத்திமாலை புஷ்பஞ்சார்த்தி பூஜை செய்பவர் கேதாரீஸ்வரரை மனதில் தியானம் செய்து, காசி, கங்கா தீர்த்தமாட்டியது போலும், பட்டுப் பீதாம்பரம் ஆபரணங்களினால் அலங்கரித்தது போலும் மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, வில்வம், தும்பை, கொன்றை மலர்களினால் கேதாரீஸ்வரரை அர்ச்சனை செய்து, முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப் பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, பழுப்பு, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து, எலுமிச்சம் பழம் இரண்டு, நோன்புக் கயிறு (21 இலை, 21 முடிச்சுடன்) சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்கு) கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாத மாக 21 அதிரசம், சர்க்கரைப் பொங்கல், பாயசம், புளியோதரை முதலியன நைவேத்தியமாக சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அக்ஷதை கையில் கொண்டு மூன்று முறை கேதாரீஸ்வரரை வலம் வந்து வணங்கி புஷ்ப அக்ஷ தையை சுவாமியின் பாதங்களில் சமர்ப்பித்து தூப தீபம் காட்டி நைவேத்தியம தாம்பூலம சமர்ப்பித்து கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக் கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.
பூஜையின்போது அந்தணரைக் கொண்டு கேதார கெளரி விரதக் கதை பாராயணம் செய்யக் கேட்பது நல்லது.
விரதபலன்:
இவ்வாறு சிரத்தையுடன் தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணி நீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் பெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணமாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரதத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
இவ் விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கைகூடும் என்பது அனுபவ உண்மை.

கேதார கௌரி விரத கதை பாட்டு வடிவில்..

கேதார கௌரி விரத கதை பாட்டு வடிவில்..

காப்பு ஆதி பரமேஸ்வரியே ஆண்டவனைப் பூசித்துப் பாதியிடம் பெற்ற பரிசு தனை- நீதியுடன் சொன்னவர்கள் கேட்டவர்கள் சோர்வின்றி நோற்றவர்கள் துன்னுவரே பல்வளனும் தோய்ந்து

நூல் வெள்ளியங்கிரியென விளங்கு கைலையில் உள்ளந்தோறும் உறையும் ஒருவன் உமையொரு பாகனாய் உன்னதரேத்த இமையா முக்கண் திகழ் இறையவனாய் புன்னகை பொங்கும் திருமுகம் பொலிய வன்மையுடனே விளங்கிடும் பொழுதில் விண்ணக அழகியரில் வியன் புகழுடையாள் கண்கள் வியக்கும் கவினுடை ரம்பை பண்ணுடை இசைக்குப் பரதம் பயின்றாள்

பிருங்கி என்னும் பெருந்தவ முனிவனும் கருத்தை மயக்கும் இந்நாட்டியம் கண்டு விருப்பம் மிகுந்த விகடநடனத்தால் கருணைக் கௌரிகாந்தனைப் போற்ற அண்ணலும் பிருங்கியை அனுக்கிரகிக்க பண்ணும் சிவநெறிப் பிருங்கிப் பித்தர் மண் சுமந்திட்ட கடவுளை மட்டும் சுற்றி வந்தே சம்போ மகாதேவவென்று பற்றுதலுடனே பன் முறை போற்றி வற்றாக்கருணை உமையை வணங்கா உற்ற திடமுடன் நிலவுலகு மீள முற்றும் துறந்த பிருங்கியாம் முனிவன் சற்றும் தன்னை மதியாமை கண்டு சக்தி தரும் சங்கரி மிகக்கோபித்து தக்க தண்டனை தருவோம் யாமென துக்கமுண்டாக அவன் சரீரத்திலங்கு சக்தியெல்லாம் நீங்கவே சபித்தாள்

நண்டொடு பன்றிக்கும் நல்லருள் சுரக்கும் அண்ணலோ பிருங்கியின் அவலம் கண்டு தண்டமொன்றை அவன் தாங்க அளித்து பெண்ணுடை செயற்கு எதிர் செயலாக திண்மை கொடுத்திட தீரனாம் முனிவனும் அட்டகாசனாய் விகடமாய் ஆடி நட்டம் பயில் நாதனைப் போற்றிட எட்டுத்திசையும் ஏத்தும் அம்மை வெட்கம் மிகுந்து வேதனை கொண்டு கைலையை விட்டு காசினிபுகுந்து கானகம் தோறும் சுழன்று திரிந்து அலையும் மனதை அடக்கியகௌதமன் நிலையிலா இன்பம் நாடா முனிவனகத்து கலை நிறை பூங்காவின் மரமொன்றிலே இலை மறை காயாய் இனிதுறைந்திட்டாள்

மாரி குன்றி மலரெல்லாம் வாடி சீரியல் சிதறி செந்நெறி மறைந்து பாரிலே பாலைவனம் எனக்கிடந்த பேரியல் அவ்வனம் பெரிதும் மலர்ந்து கூர்விழி கொண்ட கௌரி மீனாளுற்ற பேருவகையாலே பொலிவுறச் சிறந்து அந்தணர் மகிழ ஆவினம் சிறக்க சுந்தர மலர்கள் சுகந்தம் பரப்ப சந்ததம் குளிர்ந்த சந்தோஷம் தெரிந்து தந்தை போலும் கௌதம மறையோன் முந்தைப் பிணக்கால் மாதிரிபுரசுந்தரி வந்த தன்மை உணர்ந்தே வணங்கிப் பந்தமுறவே பாங்குறப் போற்றினன்

அர்த்த நாரியாய் அரனார் உடலில் பர்த்தா பத்தினி பேதம் ஒளிய இருவர் என்னும் இயல்பு இல்லாமல் ஒருவர் என்னும் உயர்வே ஓங்க கிருபை பொலியும் காட்சியே தோன்றும் அருளைப் பெறும் வகை அருள்கநீரே என்று அம்மை வேண்ட அம்மாமுனிவனும் தன் புண்ணியப்பயன் போலுமிதுவென கன்னல் மொழியன் கௌதமன் மகிழ்ந்து பன்முறை போற்றி கேதாரகௌரியென்ற வன்மை நிறை விரத முறைமையை அம்மைக்குச் சொல்ல அவளும் மகிழ்ந்து எம்பிரானை நோக்கி நோன்பு முயன்றாள்

புரட்டாதித் திங்கள் புகழ் அமாவாசை இரவு கழிந்த ஈரைந்தாம் நாளாம் வரம் மிகத்தரு விஜயதசமி தொட்டு இருபத்தொரு நாள் இறைவனை நோக்கி கருணை மிக்க காமவல்லி நோற்று வரும் சதுர்த்தசியில் வாழ்வு சிறக்க இருபத்தொரு முடிச்சுஇட்ட காப்பிழை கரத்தில் அணிந்தாள் காரிகையாளே

மான்மழு ஏந்திய மாநாற் கரத்தராய் வான் மண் ஏத்திட வெள்விடையேறி தேன்நிறை கூந்தல் தேவி முன்பு கோன் என மணவாளக்கடவுள் தோன்றி நோன்பினை ஏற்றோம் நொந்தனையோ என்றே வினவி எம்மன்னை கௌரியை தன்னோடு அணைத்தே தந்தோம் இடம் என்று இனிய மொழிபேசி நடமிடு நாயகர் உருவம் மாறினன்

அப்பனும் அம்மையும் ஆங்கே இணைந்து இப்புவி ஏத்த அர்த்தநாரீசனாய்
இலங்கு செப்பருவடிவம் கொண்டனர்; அதனை தப்பிலாப் பிருங்கியொடு கௌதமர் விண்ணகத்தர் மண்ணவர் யாவரும் கண்களி கூரமகிழ்ந்தே போற்றினர்

எம்மை நோக்கி இவ்விரதத்தை முறையாய் இம்மையில் நோற்பவர் இன்பமெல்லாம் பெறுவர் நம்புமின் இதைஎன்றே நாயகஅர்த்தநாரீசர் மொழிந்தே அருளினர் போற்றினர் யாவரும்

அன்று தொட்டே ஆடவர் மங்கையர் என்னும் யாவரும் ஏற்றம் பொங்க மண்ணுலகத்தில் மணவாழ்வு உண்டாக பண்ணும் செயல்கள் பலிதமுண்டாக செல்வம் ஓங்க சீர்மைகள் பொலிய பல்வகை இன்பமுடன் பரகதிகிட்ட கேதாரகௌரியுடன் கடவுளைப் போற்றி தீதில் நோன்பு நோற்றுச் சிறந்தார்

எழுதியவர்- நீர்வை.தி.மயூரகிரிசர்மா

விரதபலன்

விரதபலன்

தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்

பூலோகத்தில் இவ்விரதம் பரவிய முறை

பூலோகத்தில் இவ்விரதம் பரவிய முறை


சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர்
இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்ர்வராஜனுக்கு கூறியருளினார். விரத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். மிகவும் வறுமையினால் வாடிய இவ்விரத்த்தை அனுஷ்டிக்க சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார்.
அனைவருக்கும் வணக்கம். இந்த விரதம் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஆவணிமாதம் வளர்லிறை நவமியில் ஆரம்பித்து புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு முன்தினம்வரை 21 நாட்கள் நடைபெறுகிறது. வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவேண்டுகிறேன். Ganesan Pondicherry